புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார் திருவாரூர் ம...
புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார் திருவாரூர்
மாவட்ட ஆட்சியர் சி. நடராசன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
படித்தவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை
தொழில்முனைவோராக உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, தமிழக அரசு புதிய
தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாடு என்ற புதிய திட்டத்தை
அறிவித்துள்ளது.
சிறப்பு பிரிவாக மகளிருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம்
பயன்பெறவேண்டுமென ஒதுக்கீடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளங்கலை,
முதுகலை, பட்டயப் படிப்பு, ஐ.டி.ஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி
நிறுவனங்கள் மூலம் தொழில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு மாதம் தொழில் முனைவோர்
பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து பின்னர் வங்கிகள்
அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன்பெற வழிவகை
செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு தொழில்
திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை)
முதலீட்டு மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.
வயது 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான
மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர்,
சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது
45 ஆகும்.
பயனாளி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில்
வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு
ஏதுமில்லை.
திட்ட மதிப்பீடு ரூ. 5 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை.
அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் சேவைத் தொழில்கள்
தொடங்கலாம். பொதுப் பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும்,
சிறப்புப் பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும் முன்தொகை செலுத்த
வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம்
கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.
தகுதியானவர்கள் திருவாரூர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்பப்
படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு திருவாரூர்
காரைக்காட்டுத் தெருவிலுள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகி பெற்றுக்
கொள்ளலாம்.
தொலைபேசி எண்: 04366-224403.
தகவல் : அபு ஆசிம்


